ஸ்மார்ட் போன்கள் பற்றிய சில தவறான நம்பிக்கைகள்!!

ஸ்மார்ட் போன்கள் பற்றிய சில தவறான நம்பிக்கைகள்!! 


பொதுவாகவே உண்மையை விட பொய்கள், வதந்திகள் தான் வேகமாக பரவும்.

உண்மையையே சொல்லி இருந்தால் கூட அது அப்படியே கொஞ்சம் மாறி வேறு விதமாக போய் சேருவதும் உண்டு. அப்படி தான் செல்போன்கள் பற்றி பல தவறான நம்பிக்கைகள் உள்ளன. அதிலும் இப்போதெல்லாம் செல்போன்கள் பலரது வாழ்வின் அத்தியாவசியமாகவே மாறி விட்டதால் அவற்றை பற்றிய சில உண்மைகளை இப்போது பார்க்கலாம்.


சிக்னல்

நம்மில் பெரும்பாலானோர் செல்போனின் மேல் பகுதியில் காட்டும் கோடுகளை வைத்து சிக்னல் இருக்கு, இல்லை, கம்மியா இருக்கு என நினைப்போம். இது சரிதானா என்றால், இந்த கோடுகள் மட்டுமே வைத்து சிக்கனலைப்பற்றி சரியாக சொல்ல விட முடியாது என்பதே உண்மை. ஏனெனில் ஒரு ஐபோனில் 3 கோடுகள் காட்டும் போது அங்கே உள்ள கேலக்சி போனில் 4 கோடுகள் காட்டும். அதே சமயம் அப்படி இருக்கும் கோடுகள் கால் அல்லது டேட்டா இவற்றில் எதை வேண்டுமானாலும் குறிக்கலாம். நீங்கள் போன் டேட்டாவை ஆன் செய்யாத போதும் கூட இந்த கோடுகள் கால் அல்லது டேட்டா என எதை வேண்டுமானாலும் அந்த குறிப்பிட்ட சமயத்தில் குறிக்கலாம். 

சில சமயம் 4 கோடுகள் இருந்தால் கூட கால் போகாது, மெசேஜ் போகாது. ஏனெனில் அப்போது தான் சிக்னல் இல்லை என்று அர்த்தம். ஒரு போன் 10 db க்கு ஒரு கோடு என்றும் இன்னொரு போன் 15 db க்கு ஒரு கோடு என்றும் வேறு மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்பதால் இந்த கோடுகளின் அர்த்தம் எல்லா போன்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால் இந்த கோடுகளை வைத்து போன்களை ஒப்பிடவும் முடியாது. 

பிக்செல்


அதிக மெகாபிக்செல் என்றால் போட்டோ நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையும் பலரிடம் உள்ளது. பொதுவாக கேமரா மூலம் எடுக்கும் புகைப்படங்கள் சின்ன சின்ன புள்ளிகளால் ஆனது. இது தான் பிக்செல் எனப்படும். ஒரு மெகாபிக்செல் என்பது போட்டோவில் உள்ள ஒரு மில்லியன் சிறிய புள்ளிகள். உண்மையில் போட்டோவின் தரத்திற்கு பிக்செல் அளவு மட்டும் முக்கியமல்ல. கேமரா லென்ஸ் எந்த பொருளால் தயாரிக்கப்பட்டது, அதன் அளவு, போகஸ் நீளம், ஒளி சென்சார் , பயன்படுத்தப்படும் ஹார்ட்வேர், சாப்ட்வேர் போன்றவை அனைத்தும் தான் போட்டோவின் தரத்தை நிர்ணயம் செய்யும். சாதாரண 13 மெகாபிக்செல் போன் எடுக்கும் போட்டோவை விட 8 மெகாபிக்செல் ஐபோன் எடுக்கும் போட்டோ நன்றாக இருக்க இது தான் காரணம். 

ரகசிய விண்டோ

Incognito விண்டோ வழியாக நாம் இணையத்தில் என்ன பார்த்தாலும் செய்தாலும் அவற்றை கண்டு பிடிக்க முடியாது என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. உண்மையில் Incognito விண்டோ வழியாக பார்த்தால் எந்த ஹிஸ்டிரியும் இருக்காது. குக்கீஸ் கூட இருக்காது தான். ஆனால் இதை வைத்து உங்கள் நடவடிக்கை, இருப்பிடம், நீங்கள் பார்க்கும் சைட்கள் போன்றவற்றை முழுமையாக மறைக்க முடியாது. ஏனெனில் நீங்கள் பார்த்த சைட்களில் அந்த ஹிஸ்டிரி கண்டிப்பாக இருக்கும். 


இரவு முழுவதும் சார்ஜிங்


ஸ்மார்ட் போன்களைப் பொறுத்தவரை சீக்கிரம் சார்ஜ் தீர்ந்து விடுவதால் அவற்றைப் படுக்கும் முன் சார்ஜ் போட்டு காலையில் எழுந்தவுடன் எடுக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. அதுவும் விடிய விடிய சார்ஜ் ஆகி கொண்டே இருக்கும். அப்படி செய்வது தவறு, இதனால் போன் சூடாகி பேட்டரி பாதிக்கப்படும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. ஆனால் அதெல்லாம் உண்மையல்ல. ஏனென்றால் இப்போதைய போன்கள் சார்ஜ் முழுவதும் ஏறியவுடன் சார்ஜருடன் இணைந்திருந்தால் கூட, சார்ஜருக்கும் பேட்டரிக்கும் இடையேயான தொடர்பு நீங்கி சார்ஜிங் நின்று விடும் படி தான் தயாரிக்கப்பட்டிருக்கும். முழுமையாக சார்ஜ் ஆனவுடன் ஸ்விச் போட்டிருந்தாலும் கூட சார்ஜிங் சிம்பல் இருக்காது. இதை கவனித்திருந்தால் தெரிந்திருக்கும். ஆனாலும் இடையில் எழுந்தால் சுவிச்சை ஆப் செய்யுங்கள். அது ஒன்றும் தவறல்ல. 

பிரைட்னஸ்

செல்போனின் பிரைட்னஸை பொறுத்தவரை ஆட்டோமேடிக் பிரைட்னஸ் தான் உங்கள் பேட்டரியை பாதுகாக்கும் என்பது முற்றிலும் பொய். உங்கள் பேட்டரியை பாதுகாக்க நினைத்தால் தேவையற்ற நேரத்தில் அல்லது இரவில் பிரைட்னஸை கம்மியாக வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் கண்ணிற்கும் நல்லது. 

சார்ஜர்

ஒரு செல்போனுக்கு பிற சார்ஜர்களை பயன்படுத்தக்கூடாது, மொபைல் கம்பெனி வழங்கும் சார்ஜரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பதில் எந்த உண்மையும் இல்லை என்கிறார்கள் வல்லுநர்கள். இதெல்லாம் வேறு நிறுவனத்தின் சார்ஜர்களை வாங்க கூடாது என செல்போன் நிறுவனங்கள் பார்க்கும் வேலை. ஆனால் மிகவும் மலிவான தரமற்ற சார்ஜர்களை மட்டும் பயன்படுத்தக்கூடாது. 

தகவல் மீட்பு


செல்போன், லேப்டாப், கணினிகளில் டெலீட் செய்த தகவல்களை திரும்ப பெற முடியாது என பலர் எண்ணுகிறார்கள். இது முற்றிலும் தவறு. நீங்கள் டெலீட் செய்த பைல் உங்கள் லிஸ்டில் இல்லை என்றாலும் கண்டிப்பாக அந்த தகவல்கள் கணினியில் இருக்கும். இதற்காக பல ரெகவரி சாப்ட்வேர்களும், பல சென்டர்களும் உள்ளன. அவற்றின் மூலம் எல்லா தகவல்களையும் (போட்டோ மற்றும் விடீயோக்களையும் தான்) எடுக்க முடியும். 

சார்ஜிங்

பேட்டரியை சார்ஜ் செய்யும் முன் அதை முற்றிலும், அதாவது 0% வரை பயன்படுத்திவிட்டு பின் சார்ஜ் செய்தால், பேட்டரியின் ஆயுள் நீண்ட நாள் நிலைக்கும் என்ற நம்பிக்கையும் தவறு. தற்போது எல்லா போன்களும் லித்தியம் அயான் பேட்டரிகள் கொண்டு தயாரிக்கப்படுவதால் அடிக்கடி சார்ஜ் செய்தாலும் நீண்ட நாட்கள் நிலைக்கும். அதனால் சார்ஜ் ஓரளவு குறைந்ததும் தயங்காமல் சார்ஜ் போடலாம். 

வைஃபை


ப்ளூடூத், வைஃபை போன்றவற்றை ஆன் செய்து வைத்திருந்தால் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்துவிடும் என்பது மற்றொரு தவறான தகவல். ப்ளூடூத், வைஃபை போன்றவற்றை பயன்படுத்தி, பைல்களை அனுப்பும்போதும், டவுன்லோட் செய்யும் போதும் மட்டுமே அவை பேட்டரியை அதிகம் பயன்படுத்துகின்றன என்பதே உண்மை. மற்றபடி ஆன் செய்திருக்கும் போது அவை மிக குறைந்த அளவே பேட்டரியை பயன்படுத்துகின்றன. 


பேட்டரி சேவர்



பேட்டரி சேவர் ஆப்களை இன்ஸ்டால் செய்யுங்கள் என்ற விளம்பரங்களை ஒரு போதும் நம்பாதீர்கள். இவை எல்லாம் அவர்கள் பணம் சம்பாதிக்க செய்யும் வேலை. இப்போதைய ஸ்மார்ட் போன்கள் உண்மையிலேயே ஸ்மார்ட் என்பதால் இதற்கான வழிமுறைகள் உங்கள் போனிலேயே இருக்கும். உண்மையில் இப்படி விளம்பரப்படுத்தப்படும் பல பேட்டரி சேவர் ஆப்கள் தான் அதிகமாக பேட்டரியை பயன்படுத்துகின்றன என்கிறார்கள் வல்லுநர்கள்.

Popular posts from this blog

NMMS SAT Science - Measurements- Online Test-01

NMMS SAT Science - Force and Motion- Online Test-06

NMMS SAT Science - Measurements- Online Test-02